கர்வம் கொண்டவரா இசைஞானி?
கர்வம் கொண்டவரா இசைஞானி?
சற்றுத் தாமதம்தான் என்றாலும் இந்தக் கட்டுரையை பதிவு செய்யக் காரணம், இளையராஜா என்ற மாமேதையின் தரத்தை நம் குரலிலும் ஒருமுறை உரக்கச் சொல்லிவிடும் ஒரு ஆசைதான்!
சிலர் இளையராஜா கர்வம் பிடித்தவர், யாரையும் மதிக்காதவர் என்று மேம்போக்காக சொல்லிக் கொண்டு அல்லது வேறு யாருடனாவது ஒப்பிட்டுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.
அது தொடர்பில் எக்கச்சக்க வாதப் பிரதிவாதங்களும் எழுவது வழக்கம்.
சில தினங்களுக்கு முன் வால்மீகி ஆடியோ வெளியீட்டு விழாவில் ராஜா பேசியதை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு திரித்து வெளியிட்டு மகிழ்ந்தனர் சிலர். அதில் அப்படி என்ன திருப்தியோ தெரியவில்லை. இத்தனைக்கும் அவரது பேச்சின் வீடியோ வடிவம் கூட இப்போதும் கிடைக்கிறது.
உண்மையில் ராஜாவின் பிரச்சினையே அவரால் பக்கா பிஸினஸ்மேனாக நடந்து கொள்ளத் தெரியாததுதான். காரணம் இன்னமும் தமிழ் சினிமாவை அவர் ஹைடெக் தொழிலாகச் செய்யாததே.
“ராஜா சாருக்கு ஏன் தயாரிப்பாளர் தரப்பில் அல்லது படைப்பாளிகள் சிலருடன் மோதல் எழுகிறது தெரியுமா… தொழில் வேறு நட்பு வேறு என்று அவருக்குப் பார்க்கத் தெரியாததுதான். வியாபார விஷயங்களை அவர் சார்பில் பேச யாரும் இல்லை, அல்லது அவர் அப்படி ஒருவரை வைத்துக் கொள்ளாததே அவர் மீதான பல விமர்சனங்களுக்குக் காரணமாகிறது…”, இதை நம்மிடம் ஒரு முறை சொன்னவர் ஃபாதர் ஜெகத் கஸ்பர்ராஜ். இவர்தான் திருவாசகம் ஆடியோவின் வெளியீட்டாளர்.
உண்மையில் திருவாசகம் ஆரட்டோரியோ கிராம்மி விருதுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது. போயிருந்தால் நிச்சயம் விருதும் கிடைத்திருக்கும். ஆனால் அந்த இசை வெளியீடு தொடர்பில் ராஜாவுக்கும் - கஸ்பருக்கும் இடையே ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் அந்த இசையை அமெரிக்கா வரை செல்ல விடாமல் நிறுத்திவிட்டது. இதை நக்கீரன் தொடரில் ஜெகத் கஸ்பரே ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
ஒரு முறை இருமுறை அல்ல… பல முறை தேசிய விருதுகளையும், சர்வதேச விருதுகளையும் இப்படி தவற விட்டவர் ராஜா மட்டும்தான்.
‘கொஞ்சம் பணிந்து போனால்தான் என்ன குறைந்துவிடுவார்…?’ என்று சிலர் கேள்வி எழுப்புவதையும் பார்க்கலாம். மணிரத்னம், பாலச்சந்தர் போன்றவர்களிடம் ராஜா பணிந்து போக மறுத்ததற்கு நியாயமான காரணங்கள் உண்டு. சுஹாஸினி போன்ற அரைவேக்காட்டு புத்திஜீவிகளின் கமெண்ட்டுகளுக்கு அவர் பதிலே சொல்லாமல் போனதற்கும் காரணம் உண்டு.
அவர் பணிய வேண்டிய அவசியமென்ன… நல்ல திறமைக்கு தலை வணங்க வேண்டியது ரசிகர்கள்தான். உண்மையில் ராஜா யாருக்கும் பணிவதும் இல்லை… யாரும் தன்னை தொழ வேண்டும் என விரும்புவதும் இல்லை.
சில ஆண்டுகளுக்கு முன் இளையராஜாவின் பிஆர்ஓவுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குப் போயிருந்தோம். அப்போது ராஜா ஒரு திரைப்படங்களின் கம்போஸிங்கில் பிஸியாக இருந்தார். காலை நேரம். சிற்றுண்டி முடித்து சில நிமிடம் வெளியில் அமர்ந்திருந்தார். அப்போது நாம் வந்திருப்பதை அவரிடம் உதவியாளர் சொல்ல, அவரும் வரச் சொன்னார்.
பார்த்தவுடன் அவரை வணங்கினோம். ஆசி கூறியவர், ‘நல்லா இருக்கீங்களா? பேட்டி தவிர என்ன வேணா கேளுங்க!’ என்றார் சிரித்துக் கொண்டே. உடன் வந்திருந்த ஒரு நண்பரைக் காட்டி, ‘இல்லண்ணே… இவர் உங்களுக்கு ஒரு பாராட்டு விழா வைக்க ஆசைப்படறார்… வர முடியுமா?’ என்றோம்.
அழைப்பிதழையும் கையோடு அச்சடித்து எடுத்து வந்திருந்தார் அந்த நண்பர். அதாவது ராஜா சார் அனுமதி இல்லாமலேயே. அழைப்பிதழை வாங்கிப் பார்த்தவர், ‘நான் எந்த நிகழ்ச்சிக்குய்யா இப்பல்லாம் போறேன்… யுவன் கூப்பிட்டாக் கூட போறதில்லை… இதுல என்னைப் பாராட்டி என்ன சொல்லப் போறீங்க… எதுக்கு அதெல்லாம்?’ என்றார்.
ஆனால் வந்தவரோ எப்படியாவது ராஜா தன் நிகழ்ச்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார். அவரிடம் பொறுமையாக தனது நிலைமைச் சொன்ன இசைஞானி, “தம்பி… உங்களுக்கு என் மேல இருக்கிற அன்பு புரியுது. உன்னை மாதிரி அன்பர்களுக்கு என் ஆசீர்வாதம் உண்டு. என் அனுமதியில்லாமலேயே அழைப்பிதழ் அடிக்கும் அளவுக்கு நீங்க உரிமையோட நடந்துகிட்டீங்க. இந்த அன்பு இருந்தா போதும்யா… நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க… பாத்துட்டுப் போங்க…” என்றார்.
சாதாரணமாக அவர் எப்படி பழகுவார் என்பதற்கு அதுவே ஒரு உதாரணம்தான். “இளையராஜாவை அறியாதவர், அறியாதாரே” என்று வாலி பாடியது இதற்காகத்தான்.
இது அவரைப் போற்றிப் புகழ எழுதப்படும் பதிவல்ல. மகாபாரதம் சொல்வது போல, “அறிஞர்களையும் கலைஞர்களையும் காலத்தில் போற்றாத நாடு, ஒரு நாடுமல்ல, அதன் மன்னன் நல்ல ஆட்சியாளனுமல்ல..”, என்பதை நினைவுபடுத்தி, ராஜா பற்றிய இந்த குறிப்பைத் தருகிறோம் (ராஜா பற்றிய குறிப்புகள் மட்டும் தட்ஸ்தமிழிலிருந்து…).
No comments:
Post a Comment